அழிவின் விளிம்பில் புதிய தலைமுறையினர்.
அழிவின் விளிம்பில் இருந்தது அன்புச் செல்வங்களை காப்பாற்றுங்கள்
போதை வஸ்துக்கள், அபாயகரமான போதை வஸ்துக்கள் இளம் தலை முறையினரை காவு கொள்ளும் பிரதான சவாலாக மாறி வருகின்றது.
இன்று இலங்கையில் தினமும் 45 கோடி ரூபாய்கள் போதைபொருள் பாவனைக்காக செலவிடப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அபாயகரமான போதை வஸ்துகள் குறுகிய காலத்தில் அதிக இலாபம் தருவதால் அதில் அதிகாரம் செல்வாக்கு உடைய பாதாள உலக வலையமைப்பு அதிதீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இன்று பாடசாலைகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன, மிகவும் சிறந்த வினியோக மார்கமாக அவை பார்க்கப்படுகின்றன, வழமையான ஹிரோயின், கொகொயின் ஐஸ் போதை வஸ்துக்களுடன் டொஃபி, ச்விங்கம், இனிப்பு பானங்கள், வில்லைகள் என பலவேறு வடிவங்களில் போதை வஸ்துக்கள் சூட்சுமமாக சந்தைப்படுத்தப்பட்டு ஆண் பெண் பால் வேறுபாடின்றி பிள்ளைகள் போதைகளின் அடிமைகள் ஆக்கப்படுகின்றனர்
*வீட்டு சூழல் பாதுகாப்பானது என்று மட்டும் இருந்து விடாதீர்கள், வெளியுலகம் மேலதிக வகுப்புக்கள் ஏன் பாடசாலை வளாகங்கள் கூட உங்கள் பிள்ளையை காவு கொள்ளலாம், அவர்களுடன் நெருக்கமாக இருங்கள், அவர்களுக்கு அன்பாக ஆபத்துக்களை எடுத்துச் சொல்லுங்கள், அவர்களது நடத்தைகளில் அவதானமாக இருங்கள்.*
அவர்களது பாடசாலை நட்புக்கள் புதிய சமூக வலைதள நட்புக்கள் குறித்த அவதானம் தேவை, போதை வஸ்துகளுடன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் இளம் சிறார்கள் பதின்ம வயதினர் ஆளாகின்றனர்.
எவ்வாறு உலகில் ஆயுத உற்பத்தியாளர்கள் இன மத மொழி வேற்றுமைகளில் முதலீடு செய்கிறார்களோ அதே போன்றே போதை வஸ்து உற்பத்தியாளர்களும் ஒரு சமூகத்தின் இளம் மற்றும் மாணவ சமூகத்தை இலக்கு வைத்து அழிப்பதற்கு போதை வஸ்துக்களை ஆயுதமாக பயன்படுத்த இன மத வெறியர்களை தூண்டுகிறார்கள்.
*சமூக ஊடகங்கள், இன்டர்நெட் விளையாட்டுக்கள் மற்றுமொரு வகையான போதையை, மதிமயக்கத்தை இளம் தலைமுறையினர் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றன.*
ஆன்மீக நம்பிக்கைகள் குன்றிய பொருளாதாரப் பிராணியாக ஒரு சமூகம் மாறுவது குறித்து கடந்த காலங்களில் அதிகம் பேசப்பட்டது.
இப்பொழுது ஆன்மீக நம்பிக்கைகள் அற்ற பொருளாதாரமும் அற்ற சைபர் உலகில் மதிமயங்கி சஞ்சாரம் செய்யும் ஒரு தலை முறை உருவாகி வருகிறது.
அதேபோன்றே சகலவிதமான சன்மார்க்க குடும்ப சமூக கட்டுக் கோப்புகளையும் தகர்த்தெறியும் ஒரு (தறுதலை) தலை முறை உருவாகி வருகிறது.
போதை வஸ்துக்கள், அபாயகரமான போதை வஸ்துக்கள் புதிய சந்ததியினரை இலக்கு வைத்து காவு கொண்டு வருகிறது.
இறையச்சம் தக்வா உடையவர்களுக்கு மாத்திரமே இஸ்லாம் மேற்படி அபாயகரமான தீங்குகளில் இருந்து அபயம் அளிக்கிறது.
இறையச்சம் ஒன்றே அழிவின் விளிம்பில் இருந்து எமது குழந்தைச் செல்வங்களை சந்ததிகளை பாது காத்திட முடியும்.
மது மற்றும் போதை வஸ்து பாவனைகளில் இருந்து சமூகத்தை காப்பது ஒவ்வொரு உறுப்பினரினதும் கடமையாகும்.
*யுகத்தின் புதிய நூதனமான சவால்களுக்கு முகம் கொடுக்கும் மத்திய நிலையங்களாக மஸ்ஜிதுகள் மாறுதல் வேண்டும், மிம்பர் மேடைகள் வலுவூட்டப்படல் வேண்டும், பாடசாலைகள் உளவள ஆலோசனைகளுடன் பதின்ம வயதினரை வழி நடாத்த வேண்டும்.*
எனது வீடும், விட்டுச் சூழலும் மாசின்றி தூய்மையாக இருக்கின்றது என்பதில் திருப்திப் பட்டுக் கொள்ளாதீர்கள், மரணத்தை விளைவிக்கும் நுளம்பு அண்டை அயலவர் வீடுகளில் இருந்து உங்களை நாடி வருவது போல
எல்லா விதமான சீர்கேடுகளும் நாளை உங்கள் வீட்டிற்குள் குடி புகுந்து குடும்பம் நடத்தும்.
போதைவஸ்த்து வியாபாரிகள், வினியோகஸ்தர்கள், பாவனையாளர்கள் சொந்த பிள்ளைகளாக உறவினர்களாக இருந்தாலும் அவர்கள் குறித்த தகவல்களை பாதுகாப்புத் துறையினருக்கு வழங்குங்கள்.
*எனது குடும்பம், எனது சமூகம் எனது இனம் என்றில்லாது நன்மைகளை ஏவி தீமைகளை தடுக்கின்ற பணிகளில் கூட்டுப் பொறுப்புடன் தேசத்திற்கான பங்களிப்பினைச் செய்வதில் தான் "கிலாபாத்" பணி இருக்கிறது.*
No comments:
Post a Comment
MA UBAIDULLAH