siru kadhay


 இஞ்சிப் பிளேன்ட்டி





"மகள்.......மகள்......

எனக்கு இஞ்சி போட்டு ஒரு பிளேன்ட்டி ஊத்தித் தாறீங்களா?"என தனது மருமகள் பஸ்னாவிடம் கேட்டார் பாரூக் நானா.தொலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த பஸ்னா கோபத்துடன் எழும்பினாள்.

"இந்த கிழட்டுக்கு வேற வேல இல்ல.ஒரே இஞ்சிப் பிளேன்ட்டி.மனிசன்ட உசிர வாங்குற.எங்காவது போய்த் தொலையுதுமில்ல" என வாய்க்குள் முணுமுணுத்தவாறு பஸ்னா குசினிக்குள் சென்றாள். 


பாரூக் நானாவுக்கு ஒரே மகன் அர்ஷாத்.பாரூக் நானாவின் மனைவி மௌத்தாகும் போது அர்ஷாதுக்கு வெறும் பதினைந்து வயது தான்.அன்றிலிருந்து அர்ஷாதுக்கு எல்லாம் பாரூக் நானா தான்.அவனை கஷ்டப்பட்டு படிக்க வைத்து, திருமணமும் செய்து கொடுத்து,அவன் இப்பொழுது கட்டார் நாட்டில் ஒரு கம்பனியில் எகௌண்டனாக வேலை பார்க்கிறான்.அவனுக்கு ஒரு மகன். நான்கு வயது ஹஷ்மத்.வெளிநாட்டுக்குச் சென்ற புதிதில் அர்ஷாத் வாப்பாவுக்கு செலவுக்கு பணம் அனுப்புவான்.வீடியோ கோல் பண்ணி பேசுவான்.

இப்போதெல்லாம் அவருடன் அவன் பேசுவதேயில்லை. கோல் வரும் போதெல்லாம் பாரூக் நானா காதைத் தீட்டிக் கொண்டிருப்பார்.எங்கே மகன் தன்னோடு பேச வேண்டும் என்று சொல்ல மாட்டானா? என்று ஏங்குவார்.ஆனால்,

பஸ்னா அவருடன் மகனைப் பேச விட மாட்டாள்.அவள் பேசி விட்டு வைத்து விடுவாள்.

இப்போதெல்லாம் அர்ஷாத் அனுப்பும் பணத்தைக் கூட பாரூக் நானாவுக்கு பஸ்னா கொடுப்பதில்லை.

               

பாரூக் நானா எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டேயிருப்பார்.

வீட்டுப் பின்புறத்தில் வெண்டி ,தக்காளி, மிளகாய் என்று காய்த்துக் குழுங்கும்.முன் புறத்தில் ரோஜா, மல்லிகை என்று பூத்துக் குழுங்கும்.எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டேயிருப்பார்.

பேரனை நேசரிக்கு அழைத்துச் செல்வது கூட்டிக் கொண்டு வருவது,கடைக்குச் செல்வது, பில் கட்டுவது என எல்லா வேலைகளையும் ஓடி ஓடிச் செய்வார். 

பிளேன்ட்டியை குடித்து முடித்த பாரூக் நானா "மகள் பஸ்னா நான் ஆலமரத்தடிக்குப் போய்ட்டு வாரன்"என்று கூறியவாறு வெளியேறினார். "இந்த கிழவன்களுக்கு வேற வேல இல்ல "பஸ்னா முணுமுணுத்துக் கொண்டாள்.சூரியன் கிழக்கில் உதிக்கத் தவறினாலும் ஆலமரத்தடிக்கு போவது மட்டும் நடக்காமல் இருக்காது.பாரூக் நானாவுடன் ஒன்றாகப் படித்தவர்கள் ஐந்து பேர்.ஒவ்வொரு நாளும் நான்கு மணிக்கு ஆலமரத்தடியில் கூடி விடுவார்கள்.ஐந்து மணி வரை உலக நடப்புகளை அலசி ஆராய்வார்கள்.

ஒருவருக்கு ஒருவர் ஆறுதலும் தேறுதலும் கூறிக் கொள்வார்கள். 

              

அன்று மாலை பாரூக் நானா தனது பேரனுடன் சேர்ந்து தோட்டத்துக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்."டடப்பா இங்க பாருங்க சிவப்பு ரோஜா" ஹஷ்மத்துக்கு பூவைக் கண்டு ஒரே குஷி.எந்நேரமும் டடப்பா என்றவாறு அவரையே சுற்றிச் சுற்றி வருவான்.பாரூக் நானா நல்ல வரலாற்றுக் கதைகளை சுவைபடக் கூறுவார். நல்ல பழக்கங்கள் சொல்லிக் கொடுப்பார். அவனுடன் விளையாடுவார்.

ஹஷ்மத்துக்கு டடப்பா என்றால் உயிர்.

           

" டடப்பா உங்க பிரண்ட் வந்திருக்கார்" ஹஷ்மத்தின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தார் பாரூக் நானா. அவரது நண்பர் அப்துல்லா வந்திருந்தார்."ஆ.... அப்துல்லா வா... வா...." உள்ளே அழைத்து அமர வைத்தார். "என்ன இன்டைக்கு ஆலமரத்தடிக்கும் வரல்ல என்ன பிரச்சினை" ஆவலாகக் கேட்டார் பாரூக்." என்ன செய்ய பாரூக் உன் மருமக மாதிரியா என் மருமக .உனக்குத் தெரியும் தானே! தினம் தினம் ஏதாவது பிரச்சினை. நான் என்ன செய்தாலும் அவளுக்குக் குத்தம் தான்.இன்டைக்கு கைல காசிருக்கல்ல.எனக்கு பேப்பர் பார்க்காம இருக்க முடியாதே ! அது தான் கடைக்கு போன நேரம் சாமான் வாங்கிட்டு மிஞ்சின காசில பேப்பர் வாங்கிட்டன்.இனி வீட்டில ஒரே சண்ட.வீடு முழுக்க ஒரே குப்பயாம் என்று சொல்லி பேப்பர் எல்லாத்துக்கும் நெருப்பு வச்சிட்டா" கவலையுடன் கூறிக் கொண்டு போனார் அப்துல்லா. 

             

"இந்தாங்க அங்கிள் பிளேன்ட்டி " என பஸ்னா தேநீரை நீட்டினாள்."மகள் பஸ்னா எனக்கு மிச்ச நாளாக உங்க இஞ்சி பிளேன்ட்டிய குடிச்சிப் பார்கனும்னு ஆச. பாரூக் எப்பவும் உன்ன பத்தி தானே பேசுவான்.

நீ போடுற இஞ்சி பிளேன்ட்டி,சமையல் எல்லாத்தையும் பாராட்டித் தள்ளுவான்.வாயத் தொறந்தாப் போதும் எப்பவுமே மருமகள் புராணம் தான். என்ன செய்ய மகள் உங்களப் போல ஒரு நல்ல மருமகள் எனக்கு கிடைக்கல்ல.பாரூக் அதிஷ்டசாலி தான். என் வாழ்க்கை இப்படியே நாய் படாத பாடாய்ப் போயிடிச்சி" என பெருமூச்சு விட்டவாறு அப்துல்லா தேநீரைக் குடித்து முடித்தார். பாரூக் நானா மெல்ல சிரித்துக் கொண்டார்.

             

சிறிது நேரத்திற்குப் பிறகு அப்துல்லா போய் விட்டார். பாரூக் நானா மஃரிப் தொழுது விட்டுக் குர்ஆன் ஓதினார்.பேரனுக்கும் ஓதிக் கொடுத்தார்.பேரனை மடியில் வைத்துக் கொண்டு வரலாற்றுக் கதைகள் சொன்னார். ஹஷ்மத் ஆவலோடு கதை கேட்டான். "அதுக்குப் பிறகு என்ன நடந்திச்சி டடப்பா" அவனுக்கு ஆயிரம் கேள்விகள். பொறுமையாக அவற்றுக்குப் பதில் கூறிக் கொண்டிருந்தார் பாரூக் நானா. அவருக்கு மீண்டும் ஒரு பிளேன்ட்டி குடிக்க வேண்டும் போல் இருந்தது. 

"மகள்.....மகள்.....

பஸ்னா " தொலைபேசியில் மூழ்கியிருந்த பஸ்னாவுக்கு எரிச்சலாக இருந்தது. "சீ.....கொஞ்ச நேரம் நிம்மதியாக இருக்க விடமாட்டாரே இந்த மனிசன்" என எண்ணியவாறு முன்னறைக்கு வந்தாள்."என்ன....என்ன வேணும்" முகத்தில் பாய்ந்தாள் பஸ்னா. "இல்ல மகள் ஒரு இஞ்சிப் பிளேன்ட்டி......."

இழுத்தார் பாரூக் நானா. 

          

"டடப்பா நீங்க சொல்லியிருக்கீங்க தானே மூத்த ஆக்களோட மரியாதையாப் பேசணும் ,இரக்கமாப் பேசணும் அப்படி என்று ஆனா உம்மா ஏன் எப்பவும் உங்க முகத்தில பாயுராங்க " ஹஷ்மத்தின் கேள்வியைக் கேட்டு துணுக்குற்றாள் பஸ்னா. 

"மகன் டடப்பா ஒரு நாளைக்கு எத்தன முற பிளேன்ட்டி குடிக்கிறன் சொல்லுங்க பார்ப்பம்"


"ஓ ... டடப்பா நீங்க ஒரே இஞ்சி பிளேன்ட்டி தானே கேக்குற"


"உம்மா டடப்பாவோட இருக்கிற இரக்கத்தில தான் அப்படிப் பேசுறாங்க.நான் நிறைய பிளேன்ட்டி குடிக்கிறன் தானே.நான் கேட்ட உடனே எனக்கு ஏசாம ஊத்தித் தந்தா என்டா நான் இன்னும் நெறய குடிப்பேன்.அது  டடப்பாட ஹெல்த்துக்கு சரியில்ல தானே.பிறகு எனக்கு 'சுகர்' நோய் வரும்.அதுதான் என் மேல உள்ள அக்கறல இரக்கத்தில தான் உம்மா அப்படிப் பேசுறாங்க "


"ஓ.... அப்படியா? டடப்பாவோட உம்மாவும் இரக்கமா?ஹஷ்மத் பாரூக் நானாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.

வழமையாக பிளேன்ட்டி தயாரித்த பிறகு மேசையில் வைத்து விடும் பஸ்னா இன்று பிளேன்ட்டியை எடுத்துக் கொண்டு பாரூக் நானாவின் அருகில் சென்றாள்.

"மாமா....இந்தாங்க மாமா பிளேன்ட்டி" என

புன்னகைத்தவாறு இஞ்சிப் பிளேன்ட்டியை தனது மாமாவின் கையில் கொடுத்தாள் பஸ்னா.

No comments:

Post a Comment

MA UBAIDULLAH

Pages