உயர்தர மாணவர்களின் பாடத்திட்டங்கள் பூர்த்திசெய்யப்படாமல் இருப்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் ரணில் கோரிக்கை
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படாமை தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அவதானம் செலுத்தியுள்ளதுடன் அதுதொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருகின்றோம் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, விசேட கூற்றொன்றை முன்வைத்து ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்க விசேட கூற்றை முன்வைத்து கூறுகையில்,
உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். என்னிடமும் பல மாணவர்கள் முறையிட்டிருக்கின்றார்கள். அது தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சரை கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
இதன்போது பதிலளித்த கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன,
இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன், பரீட்சைகள் ஆணையாளருடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பில் பூரண அறிவிப்போன்றை எதிர்வரும் தினங்களில் தெரிவிப்பேன் என்றார்.
அதனைத்தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, உயர்தர மாணவர்கள் உட்பட பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் போது பைஸர் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
அதற்கு கல்வி அமைச்சர் பதிலளிக்கையில், மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றன. வைத்தியர்களின் பரிந்துரைக்கமைய தேவையான தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.
No comments:
MA UBAIDULLAH